search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் கலெக்டர் அலுவலகம்"

    • சின்னம்மாள் என்பவர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.
    • எனது கணவருக்கு சொந்தமாக வீடும், ரூ.80 லட்சம் பணமும் உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அவினாசி கான்வெண்ட் வீதியை சேர்ந்தவர் சின்னம்மாள். இவர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கையில் மண்எண்ணெய் கேன் கொண்டு வந்த அவர் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சின்னம்மாள் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் நஞ்சப்பனுக்கு 2 மனைவிகள். எனக்கு குழந்தை இல்லை. எனது கணவர் இறந்து விட்டார். எனது கணவருக்கு சொந்தமாக வீடும், ரூ.80 லட்சம் பணமும் உள்ளது. அதனை முதல் மனைவி அபகரித்து கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். எனவே வீடு, பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

    • தாசில்தார் மற்றும் போலீசார், பொதுமக்கள் முன்னிலையில் அந்த மதுபான கூடம் திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர்.
    • தற்போது அந்த மதுபான கூட நிர்வாகிகள் மீண்டும் மதுபான கூடத்தை திறந்து செயல்படுத்துவோம் என்று கூறி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் பகுதியை சேர்ந்த சுற்றுவட்டார பொதுமக்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு மனு கொடுத்தனர்.

    அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் சேவூர் கிராமத்திற்கு உட்பட்ட பந்தம்பாளையத்தில் ஒரு தனியார் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கூடம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள் என அனைவருக்கும் இடையூறாக உள்ளது. ஏற்கனவே இந்த மதுபான கூடம் அமைவதற்கு முன்பு வேட்டுவபாளையம், முறியாண்டம்பாளையம், சேவூர் ஆகிய 3 ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டத்தில் இந்த மதுபான கூடம் அமைய கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.

    இதையடுத்து மதுபான கூடத்தை எதிர்த்து பொதுமக்கள் சார்பில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு குறைதீர்க்கும் கூட்டத்தில் 3 முறை மனு அளித்துள்ளோம். அதிகாரிகளிடமும் மனு அளித்து உள்ளோம். இதையும் மீறி அந்த மதுபான கூட நிர்வாகத்தினர், வேறொரு மாவட்டத்தில் அனுமதி உரிமம் பெற்று இங்கு மதுபான கூடத்தை அமைத்தனர். இதனால் சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு முதல் முறையாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். தாசில்தார் மற்றும் போலீசார், பொதுமக்கள் முன்னிலையில் அந்த மதுபான கூடம் திறக்கப்படாது என்று உறுதி அளித்தனர். இதையடுத்து கலைந்து சென்றோம்.

    பின்னர் சுமார் ஒரு வாரம் பூட்டி இருந்த அந்த மதுபான கூடம் மீண்டும் திறக்கப்பட்டது. இதையறிந்து மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அப்போதும் பொதுமக்கள் முன்னிலையில் அரசு அதிகாரிகள் இந்த கடை இனி இங்கே திறக்கப்படாது என்று மீண்டும் உறுதி அளித்தனர். இதனால் கலைந்து சென்றோம்.

    இந்நிலையில் தற்போது அந்த மதுபான கூட நிர்வாகிகள் மீண்டும் மதுபான கூடத்தை திறந்து செயல்படுத்துவோம் என்று கூறி வருகிறார்கள். அப்படி மீண்டும் திறக்கப்பட்டால் அது பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே விவசாயிகளின் நலன் மற்றும் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் நலன் கருதி இந்த மதுபான கூடத்தை இங்கிருந்து முற்றிலுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    • லோகநாதன் மேஜையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
    • திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த அரசு திட்டப்பணிக்கான காசோலையை ஒப்பந்ததாரர்களுக்கு லோகநாதன்தான் வழங்கி வந்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையில் போலீசார் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் பணம் அதிகமாக புரளும் என்பதை கருத்தில் கொண்டு இந்த ரகசிய சோதனை நடைபெற்றது.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகத்தில் கணக்கு பிரிவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அந்த அறையில் இருந்த துணை வட்டார வளர்ச்சி அதிகாரி (கணக்கு) லோகநாதன் மேஜையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. மொத்தம் ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 200 இருந்தது.

    அந்த பணத்துக்கான கணக்கு விவரங்களை லோகநாதனிடம் கேட்டனர். அவரிடம் எந்தவித விவரமும் இல்லை. இதைத்தொடர்ந்து கணக்கில் வராத பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிலேகா கூறும்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கணக்கு பிரிவில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 200, துணை வட்டார வளர்ச்சி அதிகாரியான லோகநாதனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த அரசு திட்டப்பணிக்கான காசோலையை ஒப்பந்ததாரர்களுக்கு லோகநாதன்தான் வழங்கி வந்துள்ளார். அந்த காசோலையை வழங்குவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லோகநாதன் லஞ்சம் பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

    • திருமணமான நாள் முதல் அடித்து கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்த மனோகர்.
    • மன உளைச்சல் அடைந்த சவுந்தர்யா தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க தனது தாயாருடன் வந்த இளம்பெண் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தனக்குத்தானே மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரித்த போது திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த மஞ்சுளா என்பவரின் மகள் சவுந்தர்யா என்பதும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இவரது உறவினரான கோவை மாவட்டத்தை சேர்ந்த மனோகர் என்ற கட்டிட தொழிலாளிக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

    மது பழக்கத்திற்கு அடிமையான மனோகர் திருமணமான நாள் முதல் இரண்டு மாதங்களாக சவுந்தர்யாவை அடித்து கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்துள்ளார்.

    இது குறித்து நியாயம் கேட்க சென்ற மஞ்சுளாவையும் தாக்கியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சவுந்தர்யா தனது தாயார் மஞ்சுளாவுடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் வந்து 2மாதங்களாக தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சல் அடைந்த சவுந்தர்யா இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது. திருமணமான 4 மாதங்களிலேயே இளம்பெண் கணவரின் கொடுமை தாங்காமல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வருவதாக கூறியும், திருச்சபை கட்டிடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியும் போராட்டத்தை தொடர்ந்தனர்.
    • கலெக்டர் வினீத், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மண்ணரையை சேர்ந்தவர் அருண் அந்தோணி. கிறிஸ்தவ மதபோதகர். இவர் அந்த பகுதியில் பெத்தேல் ஏ.ஜி.சபை என்ற திருச்சபையை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி அதில் திருச்சபை கட்ட சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த சிலர் கட்டுமான பணியை நிறுத்தியதுடன் அருகில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்தனர்.

    1½ ஆண்டுகளாக இதுவரை கட்டுமான பணி தொடங்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும், தங்களுக்கு திருச்சபை கட்ட உரிய அனுமதி வழங்குமாறும் கூறி அருண் அந்தோணி தலைமையில் கிறிஸ்தவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி காலை முதல் விடிய, விடிய தர்ணாவில் ஈடுபட்டனர். 2-வது நாளாக போராட்டம் நீடித்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு அருகில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டது.

    திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்தில் முடிவு தெரிவிப்பதாக கூறினார்கள். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று கூறி நேற்று காலை அருண் அந்தோணி தலைமையில் கிறிஸ்தவ மக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவை தொடங்கினார்கள்.

    அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வருவதாக கூறியும், திருச்சபை கட்டிடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

    பின்னர் கலெக்டர் வினீத், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். 2 வாரத்துக்குள் முடிவு தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் தங்களுக்கு இனிமேலும் காலம் கடத்தாமல் தெரிவிக்க வேண்டும் என்று கூறி தர்ணாவை நேற்று இரவு 9 மணிக்கு மேலும் தொடர்ந்தனர். குழந்தைகளுடன் போராட்டம் நடத்தியதால் வீரபாண்டி போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • திருமூா்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் 3 லட்சத்துக்கு 77 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
    • காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் 48 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் எங்களது பகுதிக்கு உரிய தண்ணீா் வந்து சேருவதில்லை.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பி.ஏ.பி.மற்றும் இதர பாசன சங்க விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா்கள் (தாராபுரம்) குமரேசன், (உடுமலை) ஜஸ்வந்கண்ணன், பிஏபி. கண்காணிப்பு பொறியாளா் தேவராஜன் ஆகியோர் பங்கேற்றனா்.

    இதில் பங்கேற்ற பி.ஏ.பி., வெள்ளக்கோவில் கிளை கால்வாய் (காங்கயம்-வெள்ளக்கோவில்) நீா் பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் ப.வேலுசாமி பேசும் போது, திருமூா்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில் 3 லட்சத்துக்கு 77 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இதில், காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் 48 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் எங்களது பகுதிக்கு உரிய தண்ணீா் வந்து சேருவதில்லை.

    இது தொடா்பாக கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீா்க்கும் கூட்டங்களில் எங்களது கோரிக்கைகளை கடந்த 36 மாதங்களாக வலியுறுத்தி வந்தோம். ஆனால் இதுவரையில் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை.

    ஆகவே எங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பி.ஏ.பி., திட்டத்தில் காங்கயம், வெள்ளக்கோவில் பகுதிக்கு உரிய தண்ணீா் வழங்க வேண்டும். பி.ஏ.பி., வாய்க்காலில் நடைபெறும் தண்ணீா் திருட்டை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என்றார்.

    மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்தனர். இப்போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இந்த போராட்டம் இரவு 11 மணிக்கு மேலும் நீடித்தது.

    இந்த நிலையில் வருகிற 10 நாட்களுக்குள் தாராபுரம் ஆர்.டி.ஓ. தலைமையில் பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர், காங்கயம் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் வழங்க உரிய தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    முகமது ரபீக் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
    திருப்பூர்:

    திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக்(வயது 32). பனியன் தொழிலாளி. இவரது மனைவி தஸ்லிமாபானு, இவர்களுக்கு முகமது அர்ஸத், ஆபிதா பானு  என 2 குழந்தைகள் உள்ளனர்,

    கடந்த ஆண்டு தஸ்லிமா பானு ஒரு விபத்தில் இறந்து விட்டார். இந்நிலையில் முகமது ரபீக் வீட்டில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தையும், 15 பவுன் நகையையும் தனது மனைவியின் சகோதரியான அபிராமியிடம் நம்பிக்கையின் பேரில் கொடுத்து வைத்து ள்ளார்.

    தற்போது குழந்தைகளின் படிப்பிற்காக அந்த தொகையையும் நகையையும் திருப்பி கேட்டபோது அபிராமி அதனை திருப்பி  கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளதாக கூறப் படுகிறது. இது குறித்து முகமது ரபீக் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.  ஆனால் போலீசார்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

    மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளார். அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து முகமது ரபீக் இன்று தனது குழந்தைகளுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    அப்போது பையில் மறைத்து எடுத்து வந்த பெட்ரோல் கேனை திறந்து தன் உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப் போவதாக தெரிவித்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சியடைந்ததுடன், முகமது ரபீக்கிடம் இருந்து பெட்ரோல் கேனை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

    பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி  கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் சிறிது நேரம் பரபரப்பு  ஏற்பட்டது.
    ×